ஆண் மனதின் தத்தளிப்பு
அடிப்படையாக ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அன்போ காதலோ மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்கப்பெறாத சூழலில் ஒரு ஆண், அகவெளியில், அதுவும் தன் நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் ஒரு இருபத்தியெட்டு வயது பெண்ணால் அங்கீகரிக்கப்பட்டு, காதலிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு பின்னாளில் தன் மனைவியிடம் அகப்பட்டுக்கொண்டு அல்லாடுவதே இந் நாவல்.
முன்னிரவில் தன் மனைவியுடனான உரையாடலிலிருந்து தொடங்குகிற கதை ஒரு கணவனின் புலம்பலாகத் தொடங்கி, ஒரு பெண்ணின் தவிப்பாக விரிந்து, அவன் மனைவியின் வெறுப்பாகவும் இருவரின் வன்மமாகவும் தொடர்கிறது.
அன்பின் பொருட்டு காதலின் பெயரால் விரிவடைகிற கதையில் யாரும் யாரையும் காதலிக்கவில்லை. அன்புக்காக ஏங்கி அன்பை கொண்டாடுகிற மனிதர்கள், காதலை விதந்தோதுகிற மனிதர்கள், காதலுக்கோ அன்புக்கோ ஏன் தனக்கேகூட உண்மையாக இல்லை என்கிற உண்மையை அப்பட்டமாக சொல்கிறது நெஞ்சறுப்பு.
முழுக்கவும் ஆண் கதாபாத்திரத்தின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருப்பதால் நாவல் முழுவதும் ஆண் தரப்பு நியாயங்களாகவே இருக்கிறது. அதுவே நெடுகிலும் ஒரு ஆணின் புலம்பலாக வெளிப்பட்டிருக்கிறது. பொதுச்சமூகம் வகுத்து வைத்திருக்கிற விதிகளுக்குட்பட்டே கதையில் உலவும் மனிதர்களின் வெளி அமையப்பெற்றதால் மீறலுக்கு யார் மனமும் தயாரில்லை.
இலக்கியம், காதல் , கவிதை என்று மெய்நிகர் உலகில் சதா சஞ்சரித்தவர்கள், உரையாடி மகிழ்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக யதார்த்தத்திற்கு இழுக்கப்பட்டு அகப்பட்டுக் கொண்ட பின்னால் இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கட்டிக் காத்த பெயர் என்னாகுமோவென்று பதறுகிறார்கள். மான அவமானத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தினால் எடுக்கப்படுகிற முடிவுகளால் அவர்களது வாழ்வும் அமைதியும் மெல்ல மெல்ல சூன்யத்தில் மூழ்கத் தொடங்குகிறது. உலகத்திலேயே பெரிய சாக்கடை மனசுதான் என்கிற உண்மையை நாவலில் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினூடாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் இமையம்.
பொதுபுத்தியினால் வழிநடத்தப்படுகிற வாழ்வில் மனித மனம் எத்தனை அல்லாடுகிறது, எத்தனை குழம்புகிறது, மானத்துக்கும் மரியாதைக்கும் களங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி எத்தனை குரூரமாக எண்ணுகிறது என்பதையெல்லாம் ஒளிவு மறைவின்றி சொல்வதன் மூலம் மனித வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது நெஞ்சறுப்பு.
இந்நாவலில் வரும் மனிதர்களின் வாழ்வில் எந்தவித மேன்மையுமில்லை. மேலும் அன்பு , காதல் என்கிற சொல் மதிப்பிழந்து வெற்றுக் காகிதங்களாகக் கிழித்தெறியபட்டு குவியல் குவியலாகக் குவிக்கப்படும் உண்மையையும் எளிய நடையில் பதிவு செய்கிறது.
199 பக்கங்களைக் கொண்ட இந்நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒரே வாசிப்பில் வெறும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே வாசித்து முடிக்கக் கூடிய அளவிற்கான எழுத்து நடையினை கொண்டிருப்பது இந்நாவலின் பலம். ஒவ்வொரு பாத்திர வார்ப்பும் படுநேர்த்தி. புலம்பல்களாக வரும் உரையாடல்களும், எண்ண ஓட்டங்களும் தத்ரூபமாக அமைந்திருப்பது நாவலை ஒரே மூச்சில் வாசிக்கத் தூண்டுகிறது.
நெஞ்சறுப்பு, இமையத்தின் மற்றுமொரு நாவல். 2024 சென்னை புத்தகக் காட்சியின் புது வரவு.
இமையத்தின் 'எங் கதெ' குறுநாவலை வாசித்தவர்கள் அதற்கும் நெஞ்சறுப்புக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
நெஞ்சறுப்பு
இமையம்
க்ரியா வெளியீடு
விலை ரூ. 275
Comments
Post a Comment